An IIPM Initiative
புதன், மே 4, 2016
 
 

ஓர் எளிமையான ஆசானாக இருக்கிறார் இறையன்பு: எஸ். ராமகிருஷ்ணன்

 

சுந்தரபுத்தன் | டிசம்பர் 12, 2011 13:34
 

வெ. இறையன்பு எழுதிய நெஞ்சைத் தொட்டதும் சுட்டதும், அவ்வுலகம், மேனேஜ்மெண்ட் கான்செப்ட்ஸ் இன் திருக்குறள், ஆன் த பேங்க்ஸ் ஆப் ரிவர் ஆகிய நான்கு நூல்கள் வெளியீட்டு விழா தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. நாற்பது ஐஏஎஸ் அதிகாரிகள் கலந்துகொண்ட ஒரு நூல் வெளியீட்டு விழா தமிழகத்தில் இதுவாகத்தான் இருக்கக்கூடும். பத்திரிகையாளர் மாலன், கார்ட்டூனிஸ்ட் மதன், தமிழக நிதித்துறைச் செயலர் க.சண்முகம், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோர் நூல்களை வெளியிட்டும் அவற்றை பெற்றுக்கொண்டும் சிறப்பித்தனர். ஆத்தங்கரையோரத்தில் நாவலை மொழிபெயர்த்த திருமதி. ராமஸ்ரீநிவாசன் மொழிபெயர்த்தது பற்றி பெருமிதப்பட்டார். இரு நூல்களின் விற்பனையின்மூலம் வரும் ராயல்டி தொகையை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும், காஞ்சிபுரம் நிலவொளிப் பள்ளிகளுக்கும் உதவியாக வெ.இறையன்பு வழங்கினார். இவ்விழாவில் கலந்துகொண்டு பேசியவர்களின் உரையிலிருந்து சில வரிகள்... 

மனுஷ்யபுத்திரன்

மனநிறைவும் மகிழ்ச்சியும் தருவதாக இவ்விழா இருக்கிறது. வெவ்வேறு தரப்பிலிருந்து இறையன்பு அவர்களின் பன்முக ஆளுமையைப் பார்க்கிறேன். ழுத்தாளராக பேச்சாளராக நேர்மையான அதிகாரியாக இருக்கிற அவருக்கு முதன்முறையாக நடக்கிற கூட்டம் இது. வாசகர்களிடம் தேடி வைத்திருக்கிற அன்புக்காக வாசகர்களை சந்திக்கவேண்டும் என்று சொன்னேன். தன்னுடைய செயல்கள் மட்டுமே சமூகத்தில் முன¢னிறுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறார். இங்கு வந்திருக்கிற ஒவ்வொருவர்மீதும் தனிப்பட்ட அன்பை வைத்திருக்கிறார். ஓர் அழைப்பிதழ்கூட வீணாகவில்லை என்பது இங்கு வந்திருக்கிற விருந்தினர்களே சாட்சி.

மாலன்

என் நினைவு சரியாக இருக்குமானால் 37 புத்தகங்களை இறையன்பு எழுதியிருக்கிறார். அதுவும் 37 புத்தகங்களில் நாவல், புனைகதை, கட்டுரை, கவிதை, சிறுகதைகள் என எழுதியிருக்கிறார். எனக்கும் என் வாசகர்களுக்கும் உள்ள தொடர்பு புத்தகம் என்று நினைக்கிறார். என் பார்வையில் ஆத்தங்கரையோரத்தில் ஒரு முக்கியமான நாவலாகும். நகர்மயமாதலின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை எழுதியுள்ளார். ஆற்றின் கரையில் அணை கட்டுப்படுவதற்காக விரட்டப்பட்ட பழங்குடி மக்களின் போராட்டக் கதை. பொதுவாக மனிதர்கள் பல்வேறு கதைகளைச் செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள். பாரதியார் கவிஞர் என்றுதான் தெரிந்துவைத்திருக்கிறோம். ஆனால் அவர் மிகச்சிறந்த பத்திரிகையாளர். இந்தியாவிலேயே முதன்முறையாக பத்திரிகைகளில் கார்ட்டூன் என்கிற வடிவத்தை அறிமுகப்படுத்தியவர் பாரதியார். பாரதியார் ஒரு பத்திரிகையாளர் என்று நினைப்பதில்லை. எல்லாவற்றையும் எளிமைப்படுத்தி புரிந்துகொள்கிறவர்களாக இருக்கிறோம். இறையன்பு ஓர் எழுத்தாளர் என்கிற முகம் இப்போதுதான் வெளியே வந்திருக்கிறது. எனக்குப் பிடித்த பிம்பம் அதுதான்.

மரணத்தை வெல்வது பெரிய சவாலாக இருக்கிறது. மரணம் என்கிற வார்த்தை பத்திரிகையாளர்களும் பயப்படும் வார்த்தைதான். புதுமைப்பித்தன் இறந்தபோது, இது கற்பனைக்கு அடங்காத அநீதி என்று வரா குறிப்பிட்டார். பெரியார் குடியரசு பத்திரிகையில் மரணத்தை முடிவெய்தினார் என்றார். ஜின¢னா மறைந்தபோது இயற்கை எய்தினார் என்று குறிப்பிட்டார். பிணம் என்கிற வார்த்தை கட்டுரைகளில் வந்துவிடக்கூடாது என்பதில் கண்டிப்பாக இருப்பார் என்று எனக்கு சாவி சொல்லியிருக்கிறார். மரணம், சாவு என்று பேசவது மரபு கிடையாது. அந்த மரபை உடைத்துக்கொண்டு சாகாவரம் என்ற நாவலை இறையன்பு எழுதியிருக்கிறார். மிக வித்தியாசமான நாவல் இது. யாரையும் நொந்துகொண்டு ஒப்பாரி வைக்கும் விமர்சனம் கிடையாது. அடுத்தவர்களுக்குக் கொடுப்பதில்தான் சொர்க்கம் இருக்கிறது என்பது அவ்வுலகம் நாவலில் சொல்கிறார். அவருடயை எழுதுத் திறமைக்குச் சான்றாக அவ்வுலகம் நாவல் வந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக இன்னொரு நாவலை அவர் எழுதவேண்டும். அதற்கான தகுதி அவரிடம் இருக்கிறது.

க. சண்முகம் 

இறையன்பு என்னுடைய நெடுநாளைய நண்பர். நாங்கள் விவசாயக் கல்லூரியில் படிக்கும்போது அங்குள்ள முத்தமிழ் மன்றம் ரொம்பவும் உயிர்ப்பாக இருக்கும். அதற்குக் காரணம் இறையன்பு. அவர் கவிதை, கட்டுரை எழுதுவதிலும் முதன்மையாக இருப்பார். அதைப்போலவே படிப்பிலும் முதலிடத்தில் இருப்பார். இந்நூலில் திருக்குறளில் காணப்படுகிற மேலாண்மைக் கருத்துக்களை மிகத் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார். என்னிடம் வந்து இறையன்பு யாருங்க என்று கேட்டிருக்கிறார்கள். அவர் பன்முகத் திறமையுள்ளவராக இருக்கிறார். அவரது எழுத்துநடை அழகானது. தத்துவங்களை அன்றாட வாழ்க்கை நடைமுறைகளுடன் கலந்து எழுதுகிறார். அவருடைய எல்லா நூல்களும் சிறந்த சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டவை. எழுத்தில் எப்படி சிறந்தவராக இருக்கிறாரோ அப்படித்தான் நிர்வாகத்திலும் இருக்கிறார். இப்படி ஒருசிலர் மட்டுமே இருக்கமுடியும். இது ஓர் அரிதான இணைப்பு. அவரைவிட திருக்குறள் பற்றிய நூலை எழுதக்கூடியவர் வேறு யாருமல்ல. கல்லூரி காலத்திலிருந்தே அவர் ஒரு தனித்துவமானவராகத் திகழ்ந்தார்.

எஸ். ராமகிருஷ்ணன்

இறையன்புவை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். தமிழில் பேசவும் எழுதவும் கூடிய ஆட்சியாளர் அவர். தமிழ்நாட்டில் ஆட்சியாளர்கள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் நிறைய காரியங்களை செய்திருக்கிறார்கள். மக்களை மேம்படுத்தியதோடு மொழியையும் மேம்படுத்தியுள்ளனர். அந்த வரிசையில் இறையன்பு வருகிறார். இருபது ஆண்டுகளுக்கும்  மேலாக எழுதிக்கொண்டிருக்கிறார். அவருக்கு எழுத்துலகம் சார்பாக மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆங்கிலேயர் காலத்தில் ஆட்சியாளராக இருந்த மெக்கன்சி பெரியாறு அணை பற்றிய ஒரு நூலை எழுதியுள்ளார். நடுநிலையாக பதிவுசெய்திருக்கிறார். ஓலைச் சுவடிகள் முதல் தேடி செய்திகளைச் சேகரித்திருக்கிறார். தமிழக கல்வெட்டுகள் வழியாக தமிழை வளப்படுத்தியவர் ஐராவதம் மகாதேவன். அவரும் ஓர் ஆட்சியாளர். சாதாரண மனிதர்களிடம் தமிழை எடுத்துச் செல்கிறவராக இருக்கிறார் இறையன்பு. ஒரே நேரத்தில் நான்கு வேறுபட்ட புத்தகங்களைத் தந்திருக்கிறார். ஸென் தத்துவம், திருக்குறள், நர்மதா, சுற்றுலா, அவ்வுலகம் என எழுதுகிறார். அவருக்கு எல்லாவற்றைப் பற்றியும் தனி அகப்பார்வை இருக்கிறது. எழுத்தில் சொல்வதை தன் வாழ்க்கையிலும் கடைபிடிக்கிறார். கணிவும் நிதானமும் அவரிடம் இருக்கிறது. ஓயாத வேலைகளுக்கு நடுவே எப்படி எழுதுகிறார் என்பது புதிராக இருக்கிறது. மரணத்திற்கு அப்பால் உள்ள உலகத்தைப் பற்றியும் எழுதியிருக்கிறார். இந்த உலகத்தைப் பற்றியும் எழுதியிருக்கிறார். இறையன்புவின் எழுத்துக்கள் வாழ்க்கை எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்பதை சொல்கின்றன. இறையன்பு எதையும் எளிமையாக கற்றுத்தருகிறவராக இருக்கிறார். அதை ஓர் ஆசான்தான் வழங்குகிறார். அதுவும் ஒரு முன்மாதிரியான ஆசானாக இருக்கிறார். எளிமை அவரிடம் தன்னியல்பாக இருக்கிறது. நகைச்சுவை உணர்வும் இருக்கிறது.

மதன்
முப்பது ஆண்டுகளாக கார்ட்டூனிஸ்டாக இருக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக பலதரப்பட்ட விழாக்களிலும் கலந்துகொண்டு வருகிறேன். எங்கு போனாலும் போய்ட்டு உடனே வந்துடுங்க என்பார் என் மனைவி. ஆனால் இறையன்பு நூல் வெளியீட்டுக்குப் போகிறேன் என்று சொன்னதும் அப்படியா என்று ஆச்சரியப்பட்டார். அது எனக்குக் கிடைத்த முதல் மரியாதை. ஆன் த பேங்க்ஸ் ஆப் ரிவர் புத்தகத்தை படித்து முடித்துவிட்டேன். மிக அழகான ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. புதிய கட்டுமானங்களுக்காக உலகம் முழுவதும் பழங்குடிகள் அப்புறப்படுத்தப்படுகிறார்கள். நதிகள் இருக்கிற எல்லா இடங்களிலும் நடக்க்ககூடிய பிரச்னையைத்தான் இறையன்பு எழுதியிருக்கிறார். அவர் எந்த தீர்ப்பும் சொல்லவில்லை. மக்களின் பிரச்னைகளை போராட்டங்களைச் சொல்லியிருக்கிறார்.

தனது ஏற்புரையில் நூலாசிரியர் வெ. இறையன்பு, "எனக்கு ஞாபகம் இருக்கிறது. கவிதை எழுதிக்கொண்டு விஜயா பதிப்பகத்தில் போய் நிற்பேன். கவிதை எல்லாம் விற்காது என்று சொல்லி திருப்பி அனுப்புவார்கள். இன்று அவர் என்னுடைய ஏழு புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். இன்று நான் நிமிர்ந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். எதற்காக எழுதுகிறீர்கள் புகழுக்காக ராயல்டி கிடைக்குமா என்று கேட்பார்கள். ராயல் டி வேண்டுமானால் கிடைக்கும் என்று நகைச்சுவையாகச் சொல்வேன். என் இரு நூல்களின் ராயல்டி தொகையை நிலவொளிப்பள்ளிக்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும் அளித்திருக்கிறேன்" என்று சொல்லி விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 
சுந்தரபுத்தன் 

 

 

கட்டுரையை மதிப்பிடுங்கள்:
மோசம் நன்று    
தற்போதைய மதிப்பீடு 3.8
Post CommentsPost Comments
தற்போதைய இதழ்: நவம்பர் 25, 2012

புகைப்படங்கள்
Tex-Trends 2011, the Asia's largest Textile Sourcing Fair, organised by The Ministry of Textiles alo
Penculikan Dewi Sinta-Sita Haran, an Indonesian puppet show, a combination of traditional and modern
Andhra Artist presents (Ramayan " Chindu Dance") in Suraj Kund Cultural Mela 2011. Photo: Shantanu M
Andhra Artist presents (Ramayan " Chindu Dance") in Suraj Kund Cultural Mela 2011. Photo: Shantanu M