An IIPM Initiative
திங்கள், மே 2, 2016
 
 

எட்டு மணிநேர வெட்டு

 

ஷங்கர்ராமசுப்ரமணியன் | பிப்ரவரி 18, 2012 11:09
 

தமிழகத்தில் உள்ள வரலாறு காணாத மின்தடை பொதுமக்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் தொழில்துறையினரிடம் அதிகபட்ச அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிருப்தி அணுசக்திக்கு எதிராக நடக்கும் மக்கள் போராட்டத்தின்மீது அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் தனது பணிகளைத் தொடங்கினால் மட்டும் மின்தடை நீங்கிவிடுமா?

கடந்த தேர்தலில் ஆளுங் கட்சியான திமுகவின் தோல்விக்கான காரணங்களில் மின்வெட்டு தொடர்பான தமிழக மக்களின் அதிருப்தியும் முக்கிய காரணம். ஆனால் மின்வெட்டை சீர்செய்வோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அரசு, தற்போது ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்துக்கு மேல் தமிழகம் முழுவதும் மின்வெட்டை அமல்படுத்தி வருகிறது. இதைக் கண்டித்து தமிழகத்தின் தொழில்நகரமான கோவையில் கடந்த வெள்ளிக்கிழமை, 36 தொழில் கூட்டமைப்பினர் சேர்ந்து அறிவித்த  6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள்   போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்று 30 ஆயிரம் தொழிற்சாலைகள் கோவை மாவட்டத்தில் அடைக்கப்பட்டன. ஒருகட்டத்தில் போராட்டக்காரர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போலீசார் தடியடிப் பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தால் 250 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பும், அரசுக்கு 25 கோடி ரூபாய் வரி இழப்பும் ஏற்பட்டது. 

ஒரு நாளைக்கு பத்து மணிநேரத்துக்கு மேல் மின்சாரம் இல்லையெனில் தொழிற்சாலையை எப்படி நடத்தமுடியும் என்று கேட்கிறார் கொடீசியா தொழில் கூட்டமைப்புத் தலைவர் எம். கந்தசாமி. அத்துடன் வாரத்திற்கு இரண்டு நாட்கள் மின்சார விடுப்பு என்ற கோரிக்கையையும் வைக்கிறார்.

“தமிழகத்தில் 3500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை காணப்படுகிறது. தமிழகத்தை ஏழு மண்டலங்களாகப் பிரித்து 500 மெகாவாட்டை மின்சார விடுப்பு கொடுத்து  பிரச்னையை  சமாளிக்கலாம். வாரத்துக்கு இரண்டு நாட்கள் தொழிற்சாலைகளுக்கு விடுமுறை விட நாங்கள் தயாராக இருக்கிறோம். மிச்சம் 5 நாட்கள் தடையில்லாத மின்சாரம் வழங்கினால் போதும்’’ என்கிறார்.
கந்தசாமியின் கோரிக்கை குறித்து கோவை மின்வாரியத் தலைமைப் பொறியாளர் தங்கவேலுவிடம் பேசியபோது, “தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை 10 ஆயிரம் மெகாவாட். ஆனால் நம்மிடம் 7 ஆயிரம்தான் உள்ளது. வெளிமாநிலங்களிலிருந்தும் மின்சாரம் வாங்குவது கட்டுப்படியாக வில்லை. இரண்டு நாட்கள் மின்சார விடுப்புத் திட்டத்தை அரசுக்குப் பரிந்துரைத்துள்ளோம். அதன்மூலம் மின்பற்றாக் குறையைச் சமாளிக்க முடியும் என்பது எங்கள் கணிப்பு. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாளில் நல்ல முடிவுவரும் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார்.

கோவை போன்ற தொழில்நகரங்களில் உள்ள  மக்கள் மட்டுமன்றி விவசாயி கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரையும் இந்த மின்வெட்டு பாதித்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலை களுக்கு இலவச மின்சாரச் சலுகை வழங்குவதைக் குறைகூறுகிறார் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் வாசுதேவன். “ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் தொழிற்சாலையின் கட்டுமானப் பணி தொடங்கும்போதே அரசு, இலவச மின்சாரம் கொடுக்கிறது. அத்துடன் காற்றாலை மின்சாரம் போன்ற சூழலை மாசுபடுத்தாத திட்டங்களில் அரசு முதலீடு செய்யவேண்டும். கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான அச்சத்தை மக்களிடம் போக்கி அதைத் தொடங்கலாம்.இப்போது விவசாயிகளுக்கு 3 மணிநேரம்தான் மின்சாரம் தினசரி கிடைக்கிறது. ஆனால்  அந்த   மூன்று மணி நேரத்திலும் 20  தடவை மின்சாரத்தடை ஏற்படுகிறது” என்கிறார்.

தமிழகம் எங்கும் நிலவும் மின்தடைக்கு எதிரான அதிருப்தியால் கூடங்குளம் அணுமின்நிலையத் திட்டம் தொடங்குவதற்கு ஆதரவான குரல்கள் தமிழகத்தில் அதிகரித்துவருகின்றன.    ஆனால் தமிழகத்தில் மின்சாரத்திற்குப் பற்றாக்குறை என்ற வாதத்தையே அரியானாவின் முன்னாள் மின்வாரியத் தலைவரும் அணு உலைக்கெதிரான மக்கள் இயக்கத்தின் நிபுணர் குழு உறுப்பினருமான எம்.ஜி.தேவசகாயம் மறுக்கிறார்.

“மின்சாரத்தை சரியாக விநியோகித்தாலே இப்பிரச்னையை எளிதாக சரிசெய்யலாம். தமிழகத்தில் அனைத்து வகைகளிலும் கிடைக்கும் நிர்மாணிக்கப்பட்ட மின்சாரக் கொள்ள ளவு 16 ஆயிரத்து 700 மெகாவாட். ஆனால் 8500 மெகாவாட்தான் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த அளவைக் கொண்டே மின்சாரத் தட்டுப்பாட்டை நன்கு சமாளிக்க முடியும். விநியோகத்தை மாற்றி யமைக்க வேண்டும். அரியானாவில் இதுபோன்ற நிலை வந்தபோது, ஆறே மாதங்களில் மின்வினியோகத்தை ஒழுங்குப்படுத்துவதன் மூலம் நிலைமை சீரடைந்தது. கூடங்குளம் அணுமின்நிலையத்தில் பணிகள் தொடங்கினால் மின்தட்டுப்பாடு சரியாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் உற்பத்தி, செலவு, தமிழகத்துக்கான ஒதுக்கீடு, விநியோகத்தில் ஏற்படும் கழிவு ஆகியவற்றைச் சேர்த்தால் நமக்கு 200 மெகாவாட் மட்டுமே கிடைக்கும். இருக்கும் மின்சாரத்தை சரியாகப் பயன்படுத்தாமல் புதிதாக உற்பத்தி செய்வேன் என்கிறது அரசு” என்கிறார் தேவசகாயம்.

 கடுமையான மின்வெட்டு அமலில் இருக்கும் இச்சூழ்நிலையில் கூடங்குளம் அணுமின்நிலையம் தொடர்பான மக்களின் அச்சங்களைப் போக்குவதற்கு தமிழக அரசு நான்கு பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழுவில் இருக்கும் விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் அணு ஆற்றல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் என்பதுடன், கூடங்குளம் அணு மின் நிலையத்தை வெளிப்படையாக ஆதரிப்பவர் என்பதாலும் அவரை நீக்கவேண்டும்    என்று  அணுஆற்றலுக்கு எதிரான  மக்கள் இயக்கம் கோரியுள்ளது.     

பேராச்சி கண்ணன் உதவியுடன்
 

கட்டுரையை மதிப்பிடுங்கள்:
மோசம் நன்று    
தற்போதைய மதிப்பீடு 0
Previous Story

முந்தைய கட்டுரை

Next Story

அடுத்த கட்டுரை

Post CommentsPost Comments
தற்போதைய இதழ்: நவம்பர் 25, 2012

புகைப்படங்கள்
Tex-Trends 2011, the Asia's largest Textile Sourcing Fair, organised by The Ministry of Textiles alo
Penculikan Dewi Sinta-Sita Haran, an Indonesian puppet show, a combination of traditional and modern
Andhra Artist presents (Ramayan " Chindu Dance") in Suraj Kund Cultural Mela 2011. Photo: Shantanu M
Andhra Artist presents (Ramayan " Chindu Dance") in Suraj Kund Cultural Mela 2011. Photo: Shantanu M