பள்ளிக்கூடம் என்று இன்று வழங்கும் சொல்லே சமணர்கள் கொடுத்த சொல்தான் என்பர் ஆய்வாளர்கள். மதுரையைச் சுற்றி உள்ள பாண்டவர் மலை, பெருமாள்மலை, கழிஞ்சமலை, அழகர்மலை, சமணர் மலை போன்ற சமணர்கள் வாழ்ந்த மலைகளைப் பற்றி மதுரை மாவட்ட மக்களுக்கு இன்னும் அவ்வளவாகத் தெரியாது.
மதுரையைச் சுற்றி ஆங்காங்கே காணப்படும் இந்த மலைகள் தமிழக கலாசாரப் பாரம்பரியத்தின் தலைநகரம் என வர்ணிக்கப்படும் மதுரைக்குச் சான்றுகளாக நிற்கின்றன. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக உயிர்ப்போடு வாழும் நகரத்தை சங்க காலத்தோடு இணைக்கின்றன இந்த மலைகள். கி.மு., கி.பி. காலங்களில் இங்கு சமணர்கள் அதிகளவில் வாழ்ந்து மக்களுக்குத் தொண்டு செய்துள்ளனர். இவையெல்லாம் விரைவில் மக்களின் கவனத்திற்கு வரவிருக்கின்றன. தற்போது இந்த இடங்களை சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மதுரையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் தேனி செல்லும் சாலையில் உள்ளது கொங்கர் புளியங்குளம் கிராமம். அதனை ஒட்டியே இருக்கிறது பஞ்சபாண்டவர் மலை. சூரிய வெளிச்சத்தில் பாறைகள் சிவப்பு நிறத்தில் மின்னுகின்றன. முட்களும், கற்களும் நிறைந்த ஒற்றையடிப் பாதை மலைக்கு அழைத்துச் செல்கிறது. சிறிது தூரத்தில் தொல்லியல் துறையினரால் மலை பற்றிய குறிப்புகளும், மலைக்குச் செல்ல இரும்புப் படிக்கட்டுகளும் போடப்பட்டுள்ளன. இந்த மலையில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் சமணர்கள் வாழ்ந்துள்ளனர். உபாசகன், உப்பருவன், சிறுஆதன், பெருதன்பித்தன் ஆகிய சமணர்கள் இதனை உருவாக்கியுள்ளனர் என கல்வெட்டுகள் கூறுகின்றன.
இந்த மலையில் உள்ள குகைத்தளங்களில் 50க்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் காணப்படுகின்றன. மலையின் மற்றொரு ஓரத்தில் தீர்த்தங்கர் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை கி.பி. 10 ஆம் நூற்றாண் டில் அச்சநந்தி என்கிற சமணகுருவால் செதுக்கப்பட்டுள்ளதாக கல்வெட்டு களில் இருந்து தெரியவருகிறது.
இதேபோல் மதுரையில் இருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது சமணர் மலை. கீழகுயில்குடி என்ற கிராமத்தின் அருகே இந்த மலை அமைந்தள்ளது. இங்கு சமணர் பள்ளி மற்றும் ஒரு பல்கலைக்கழகமே இயங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மலையில் பரசுவநாதர், பாகுபாலி, முக்குடைநாதர் போன்றோர் சிலைகள் மலையில் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. இதனை கி.பி. 860 முதல் கி.பி. 905 வரை உள்ள காலகட்டத்தில் பரந்தக வீரநாராயணன் என்பவர் உருவாக்கி யதாக கல்வெட்டுகளில் உள்ள பிராமி எழுத்துக்கள் கூறுகின்றன. இந்த மலைகளைப் போன்று மதுரையில் சுமார் 15 இடங்களில் சமணர் படுக்கைகள், சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. மதுரையில் உள்ள தானம் அறக்கட்டளை என்ற தனியார் அமைப்பு, இந்த சமணர் படுக்கைகளை கண்டறிந்து அவற்றை சுற்றுலாத் தலமாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. அதன் முதல்கட்டமாக மாதந்தோறும் இரண் டாவது ஞாயிற்றுக்கிழமை இந்த மலைகளுக்கு பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், தொல்லியல் அறிஞர்கள், வரலாற்று ஆசிரியர்கள் உட்பட பலரை அழைத்துச் செல்கிறது அந்த அமைப்பு. இதுகுறித்து தசஇயிடம் பேசிய தொல்லியல் ஆய்வாளர் முனைவர் வெ. வேதாசலம், “மதுரையில் சமண சமயத்தைப் பரப்புவதற்காக வந்த சமண முனிவர்களை தங்கச் செய்ய அரசர்கள், மக்கள், செல்வந்தர்கள் எனப் பலரும் மலைப்பகுதியில் நிறைய வசதிகளை தர்மமாக நினைத்துச் செய்துள்ளனர். சமணர்கள் பெரும்பாலும் நகரில் வந்து பிரச்சாரம் செய்துவிட்டு மீண்டும் தங்களது மலைக்குச் சென்றுவிடுவர். இவர்கள் அந்த மலைகளில் படுக்கைகள் அமைத்துத் தங்கியுள்ளனர். சமணர்கள் கல்வி, மருத்துவம் என பலவற்றில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக இருந்துள்ளனர். இவர்கள் மூன்று காலங்களையும் உணர்ந்தவர்கள் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. மேலும் மக்களின் மனத்திற்கு அறிவுரை வழங்கியுள்ளனர். இவர்கள் பிராமி எழுத்துகளில் கல்வெட்டுகளில் குறிப்பு எழுதியுள்ளனர். இப்படிப்பட்ட இடங்களை அரசும், மக்களும் பாதுகாக்க வேண்டும். மேலும் சுற்றுலாத் தலங்களாக மாற்றி நமது பாரம்பரியத்தை வளர்க்கவேண்டும்' என வலியுறுத்துகிறார்.
இங்கு வாழ்ந்த சுமார் எட்டாயிரம் சமணர்களைக் கழுவேற்றியதாக திருவிளையாடல் புராணமும் பெரிய புராணமும் கூறுவது அக்காலத்தில் நிலவிய சமயப்போருக்கு ஆதாரமாக இருப்பினும் அதற்கு தொல்லியல் ஆதாரங்கள் ஏதும் இல்லை என்கிறார் வேதாசலம். இதுகுறித்து தசஇயிடம் பேசிய தானம் அறக்கட்டளையின் கிராமப்புற சுற்றுலா மேம்பாட்டு திட்டத் தலைவர் கே.பி. பாரதி, “மதுரையைச் சுற்றி நிறைய கலாச்சார பாரம்பரிய இடங்கள் உள்ளன. குறிப்பாக சமணர் படுக்கைகள், சிற்பங்கள் அதிகம் உள்ளன. அதனை போற்றிப் பாதுகாக்க வேண்டும் எனவும் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் எனவும் நினைத்தோம். மேலும் மதுரை வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஒரு நாள் மட்டும் மதுரையில் தங்கியிருந்து மீனாட்சி அம்மன் கோவில், திருமலை நாயக்கர் மகாலை மட்டும் சுற்றிப் பார்த்துவிட்டு போய்விடுகின்றனர். அவர்களுக்கு மதுரையில் இதுபோன்ற இடங்கள் இருப்பது தெரியாது. எனவே இந்த மலைகளை சுற்றுலாத் தலமாக ஆக்க முடிவு செய்து அதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் பேசிவருகிறோம். மதுரையைச் சுற்றி கொங்கர் புளியங்குளம், கீழகுயில்குடி, திடியல், யானைமலை, அரிட்டாபட்டி, அழகர் மலை, குன்னத்தூர், திருவாதவூர், திருமலை, தென்பரங்குன்றம் போன்ற கிராமங்களில் உள்ள மலைகளில் சமணர் படுக்கைகள், அவர்களின் ஓவியங்கள், சிற்பங்கள் உள்ளன.
இந்த இடங்கள் சுற்றுலாத் தலங்களாக மாற்றப்படும்போது அந்தக் கிராம மக்களின் வாழ்வாதார மும், பொருளாதாரமும் பெருகும். இதனால் முதலில் நாங்கள் அந்தக் கிராமங்களுக்குச் சென்று அந்த மக்களிடம் பேசி அந்த மலைகளின் பெருமைகளை எடுத்துரைத்தோம். பிறகு தொல்லியல் அறிஞர்களுடன் இணைந்து அதன் வரலாறு உட்பட பல விஷயங்களைத் தொகுத்தோம். பிறகு சுற்றுலா அமைப்புகளுடன் பேசி அவர்களை எங்களுடன் இணைத் துள்ளோம். இவைபோக மதுரையில் உள்ள ஜெயின் இன மக்களிடமும் பேசி அவர்களின் உதவியையும் பெற்றுள்ளோம். தற்போது இதுபற்றி ஆவணம் ஒன்றைத் தயாரித்து அதனை அரசிடம் முன்வைத்துள்ளோம். அதில் அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவற்றைச் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி யுள்ளோம்’’ என்கிறார் உற்சாகம் பொங்க.
தற்போது இந்த மலைகளின் அருமை தெரியாமல் சிலர் ஆக்கிரமிப்பு செய்ய நினைக்கின்றனர். உதாரணமாக யானைமலை மற்றும் அரிட்டாபட்டி போன்ற இடங்களில் பிரச்னை ஏற்பட்டபோது மக்கள் உரக்கக் குரல் கொடுத்து போராட்டம் நடத்தி அபகரிக்க நினைத்தவர்களை வெளியேற்றினர். இவற்றைத் தடுத்து இந்த இடங்களைப் பாதுகாத்து சுற்றுலாத் தலங்களாக மாற்ற வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.